அனிதா கொடுத்த பல்பு
அனிதா கொடுத்த பல்பு
பல்பு என்பது ஒரு தமிழ் வார்த்தையா?
‘சந்தேகமே வேண்டாம்’, என நாங்கள் அடித்துச் சொல்வோம். இந்த வீச்சிலிருந்து விலகி நின்றால் நீங்கள் ஒரு 'பெருசு', என்பது தெள்ளத் தெளிவு.
பல்பு பத்தி இப்போ என்ன பேச்சு?
நேத்து, எங்க வங்கியிலே, என் சகா அருண் பல்பு வாங்கி ரொம்ப நொந்து போயிருந்தான்.
அருணும் நானும் சென்னைலே ஒரே வங்கியிலே
தலைமை அலுவலகத்தில் நிதி (பைனான்ஸ்) இலாகாவில் வேலை செய்கிறோம். ஈ சி ஆர் ரோடு பாலவாக்கம்
பேச்சிலர் விடுதியில் ரூம் மேட் கூட.
அருண் சொந்த ஊர் ஈரோடு. சதானந்தன் ஆன எனக்கு கோவை. சுரேஷ் போல அருண்
எனக்கு நெருங்கிய நண்பன். சுரேஷை பற்றி பின்னர்.
உணவு இடைவேளை போது கேட்டேன், "ஏன்டா இப்பிடி?"
"ஆபீசிலே பெரிய பல்பு
வாங்கிட்டேன் ப்ரோ!"
"என்னாச்சு?"
"ரேகன்சிலியஸன் ப்ரோஸஸ்லே
புதுசா பண்ணி பேரு எடுக்கலாம்னு நெனச்சு
..சொதப்பிட்டேன். 30, 40 என்ட்ரிஸ் ரிஒர்க் .. டீம்லே எல்லோருக்கும் ரிஒர்க்.
ச்சே புத்திசாலித்தனமா செய்யறதா நெனெச்சு
இப்பிடி பல்பு வாங்கிட்டேன்" என்று புலம்பினான் அருண்.
அருண் புத்திசாலி - உடன்
ஆர்வக்கோளாறு வேறு.
இந்த மாதிரி ஆட்கள் பெரிய
காரியங்கள் செய்ய அலைவார்கள்; பிரச்சினைன்னு வந்தா பெரிசா தானே வரும்?
அலுவலகத்திலே விவரமா பேச வேணாம், ரூம்லே பேசலாம்னு விட்டுவிட்டேன். இரவு சாப்பாடு முடித்து ரூம்க்கு வந்ததும்
திரும்பவும் புலம்ப ஆரம்பித்தான் அருண்.
அருணை சமாதானம் படுத்த, "ப்ரோ பல்பு வாங்காதவன் யாரு சொல்லு. இதுக்கெல்லாம் கவலே
படாதேடா ..." என ஆரம்பித்தேன்.
"சதா, நீ எப்பிடி எது நடந்தாலும் அலட்டிக்காமே
இருக்கே? சீக்கரமாவே
சமாளிச்சுடரே! நீ பல்பு … பெரிய பல்பு எல்லாம் வாங்கி இருக்கியா? " என கேட்டான் மிகவும் பாதிக்கப்பட்ட
நிலையில் இருந்த அருண்.
"ஆமாண்டா
நெறய, டிசைன் டிசைனா, பியூஸ் போன பல்பா வாங்கியிருக்கிறேன் தெரியுமா?" என சொல்லி என் பல்பு கதைகளை சொல்ல ஆரம்பித்தேன், அருணை மீட்கும் எண்ணத்தில்.
நீங்களும் கேளுங்கள்.
நான் முதன்
முதல் பல்பு வாங்கியது எப்போது?
என் ஆரம்பகால நினைவுகளை சுரண்டி பார்த்ததில், உடனே நினைவுக்கு வருவது என் ஒன்பதாவது வயதில் வாங்கிய
பல்பு.
அன்று அம்மா என்னை பார்த்து,
"குட்டி, பாய்
கடைக்குப் போயி அரை லிட்டர் நல்லெண்ணெய் வாங்கிட்டு வா கண்ணா", என்று செல்லமாக வேண்டுகோள் விடுத்தார். பாய் ஒரு எண்ணெய் சில்லறை வியாபாரி
-கடை பூ மார்க்கெட் அருகே. அப்போதெல்லாம் எண்ணெய் சில்லறையாக தான் கிடைக்கும் -
நெகிழி (பிளாஸ்டிக்) பைகளிலோ குடவைகளிலோ (பாட்டல்களிலோ) அவை இன்னும் வராத காலம்.
குட்டி என்பது குட்டிப் புலி என்ற என் செல்லப் பெயரின்
சுருக்கம். சுறுசுறுப்பாக பாய்ந்து, பாய்ந்து, காரியங்கள்
செய்வதால் வைத்த பெயர் எனச் சொல்லி கேள்விப்பட்டதுண்டு. பிற்காலத்தில் 'சொன்ன வேலைகளை சுறுசுறுப்பாக
செய்ய' என அறிய முற்பட்டதுண்டு.
அந்த வயதில் சமையல் எண்ணை வாங்கப்போவது எனக்கு மிகவும்
பிடித்த வேலை. காரணம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
மலையாள பாய், தன் கடையில் பீப்பாய் அளவில் மூன்று பெரிய எவர் சில்வர் பாத்திரங்கள்
வைத்திருப்பார். சிறிய எவர் சில்வர் பாத்திரங்கள் மூன்றும் வைத்திருப்பார். அவைகளில் நல்லெண்ணெய், கடலையெண்னண, என வகை வாரியாக எண்ணெய்களை வைத்திருப்பார்.
பாத்திரங்களின் அடியில்
குழாய்திறப்பு (tap) இருக்கும். கால், அரை, முழு லிட்டர் என
ஒவ்வொரு அளவுக்கும், கைபிடியுடனான அளவி இருக்கும்.
குழாயை திறந்ததும், ‘கின்’னென்று, ஒரே கற்றையாக, உருட்டு கட்டையாக, (தண்ணீர் போல எல்லாம் சிதறாமல்), பீச்சி கொண்டு எண்ணெய் வரும்
காட்சி எனக்கு கண்கொள்ளா காட்சி.
அம்மாவின் ஆணையை ஏற்று, பணத்தை வாங்கிக்கொண்டு, மஞ்ச துணி பையை எடுத்துக்கொண்டு, சைக்கிள் எனும் என் மானசீக
ஸ்கூட்டரில் பறந்தேன்.
வண்டியை நிறுத்தி, பூட்டி விட்டு, எண்ணெய் கடைக்கு போனேன். எனக்கு
முன் ஒரு பெண்மணி எண்ணெய் வாங்கிக்கொண்டு கிளம்ப, கடையில் என்னை தவிர வேறு வாடிக்கையாளர்
இல்லை.
"புலி, என்த வேணும்?", பாய் மலையாள மெருகுடனான ‘தமிழில்’ கேட்டார்.
"அம்மா அரை லிட்டர் நல்லெண்ணெய்
வாங்கி வர சொன்னாங்க", என்றேன் மஞ்ச பையை நீட்டியபடி.
மஞ்ச பையை பார்த்த படி, "பாத்திரம் எவ்டே, புலி" என புருவத்தை உயர்த்தி வினவினார்.
சுருக்கென்று உறைத்தது. எண்ணெய் பாத்திரத்தை மறந்து விட்டு, மஞ்ச பையை மட்டும் எடுத்து வந்துவிட்டேனே.
ச்சே, சரியான பல்புதானே!
“என்த புலி, மஞ்ச பையில் எண்ணையா…?” என நமட்டு சிரிப்போடு கேட்டவாறு இருக்க அந்த இடத்தை
விட்டு விறு விறுவென்று நகர்த்தேன்.
சுற்றிப் பார்த்தேன். நல்ல வேளை.
பாய்யை தவிர யாருமில்லை. யானைக்கு அடி சறுக்கும் போது புலிக்கு
சறுக்காதா என்ன?
ஆனாலும் பல்பு பல்பு தானே? அது இன்று வரை ‘எரிந்து’ கொண்டிருக்கிறது.
நீங்கள் கவனித்து இருப்பீர்கள்: ‘பல்பு’ தமிழ் ‘அகராதியில்’ இன்னும் வந்து
சேர்ந்தடையாத காலம் அது.
"சதா, சின்ன வயசிலே நடந்ததை எதுக்கு
சொல்றே இப்போ", என்று துயரத்தில்
இருந்த அருண் சொல்வதையே நீங்களும் நினைக்கிறீர்களா?
சரி வாங்க, கொஞ்சம் தற்காலத்திற்கு, லாக் டவுனுக்கு முன்பான
காலத்திற்கு, விரைவோம்.
"சுரேஷ், விவேகத்துக்கு ரெண்டு டிக்கெட் கோவை
ஜி கே காம்ப்லெக்ஸ்லே எடுத்தாச்சு. நாளே ஈவினிங் ஷோ" வெற்றிப் பெருமிதத்தோடு சொன்னேன்.
"எப்ட்ரா?" ஆச்சர்யத்துடன் கேட்டான் சுரேஷ், "அடுத்த ஒரு வாரம் முழுக்க ஹவுஸ்
புல்லுனு சொன்னாங்க?"
"ஜி கே காம்ப்லெக்ஸ்
மேனேஜர்க்கு கிளோஸ்சா தெரிஞ்ச ஆள் ஒருத்தர் வாங்கி கொடுத்தார். ரெண்டு டிக்கெட்
தான் கெடச்சது. சத்தமில்லாமே நாம ரெண்டு பேரும் போயிடலாம்", என்றேன்.
சுரேஷ்ம் நானும் ஆரம்ப பள்ளி முதல் இப்போ காலேஜ்ல் பி காம்
வரை ஒரே வகுப்பில் படிப்பவர்கள். சுரேஷுக்கு கலை உணர்வு அதிகம். கவிதை எழுதுவான்; உடை அலங்கார ஆர்வம் அதிகம் - லேட்டஸ்ட்
பேஷன் என்னென்னு முதலிலேயே கண்டு எடுப்பான். சிறந்த உணவு ஆர்வலர் கூட. உடை, சாப்பாடு, எது, எங்கே
என்பதற்கெல்லாம் எனக்கு சுரேஷ் தான் முன்னோடி. என் உற்ற
நண்பன்.
"அப்ப மூர்த்தி, ராஜு, ஜெகா ..?" மற்ற நண்பர்களை கைவிடும் கவலையில் கேட்டான்
சுரேஷ்.
"அதை அப்புறம் பார்க்கலாம்", என ‘சற்றே குரலை உயர்த்தி’ முற்றுப்புள்ளி வைத்தேன், டிக்கெட் வாங்கி சாதித்த உரிமையுடன்.
டிக்கெட்டை பார்த்த சுரேஷ், "ஏன்டா சதா ஆன்லைன்
டிக்கெட் இல்லையா? டிக்கெட்லே சீட்
நம்பர் இல்லேடா” என சுட்டிக் காட்டினான்.
“நானும் டிக்கெட் கொடுத்த ஆளைக்
கேட்டேன். பால்கனி பாக்ஸ்லே கடைசீ ரோக்கு
பின்னாலே சுவரோரமா லாங் சோபாக்கள் இருக்கு இல்லே. அது வி ஐ
பி (VIP) களுக்கு. பத்து சீட் தான். ஆன்லைன் புக்கிங் இதுக்கு கெடையாது. சீட் நம்பர் எல்லாம் இல்லை. இந்த மாதிரி புது படம் ஹவுஸ் புல் ஆகும் போது
எக்ஸ்ட்ரா டிக்கெட்ஸ் தரங்க போல. நமக்கு அந்த சோபா சீட்ஸ் தான்", நான் உற்சாகம் குறையாமல்.
அடுத்த நாள் சினிமாவுக்கு போக ரெடி
ஆனேன். போன தீபாவளிக்கு அண்ணன் வாங்கி
கொடுத்த ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்டுக்கிட்டு அண்ணனின் சென்ட் கொஞ்சம்
அடித்துக்கொண்டேன்.
அண்ணன் இன்ஜினியரிங் படித்துவிட்டு
ஐடிலே வேலை. அப்பா சொல்லுவது போல கை நிறைய சம்பளம். வீட்டிலேயே அண்ணனுக்கு தான்
என் மேல் கொஞ்சமாவது நம்பிக்கை. பிளஸ் 2
லே மார்க் கம்மியாக வாங்கி, இன்ஜினியரிங் படிக்காமே பி காம் எடுத்தது அப்பாவுக்கு
பிடிக்கவேயில்லே. பி காம் க்கு அப்புறம் வேலைக்கு
போயிட்டே சி ஏ படிப்பேன் என சொல்லி பார்த்தேன். அவருக்கு நம்பிக்கை இல்லை.
‘வெளியே போயிருக்கும் அப்பா
வீட்டிற்கு வருவதற்குள் கெளம்பவேண்டும்’. அண்ணனின் சென்ட் கொஞ்சம் அடித்துக் கொண்டு
கிளம்பினேன். அட அப்பா சென்டை மோப்பம் பிடித்து விடுவாரோ என்று லேசாக பயம் வந்தது.
சுரேஷ்ம் நானும் ஜி கே காம்ப்ளக்ஸ்
வந்து பாக்ஸ் டிக்கெட் நுழைவாயிலில் டிக்கெட்டை கொடுத்தோம். டிக்கெட் கிழிக்கும்
தியேட்டர் ஊழியர் எங்களை சீட்டுக்கு அழைத்துக் போனார். எங்கள் கண்கள் கடைசி
வரிசையில் உள்ள சோபா இருக்கைகளில் லைத்தது.
பாக்ஸ் பகுதியில் போடப்பட்டிருந்த
சிவப்பு புஷ்பேக் இருக்கைகளுக்கு இடையே இருந்த தடத்தில் (aisleல்) நடந்துதான் சோபா இருக்கைகளை
அடையவேண்டும்,
அதை நோக்கி வேகமாக போன எங்களை
தியேட்டர் ஊழியர் இடை மறித்து, என்னை நோக்கி
"சார் நீங்க இங்க உட்காருங்க" என்றார். அந்த இருக்கையை பார்த்ததும்
உறைந்து போனேன் நான். அது பாக்ஸ்
பகுதியில் போடப்பட்டிருந்த சிவப்பு புஷ்பேக் இருக்கை வரிசைகளின் ஆரம்பத்தில், வழி தடத்தில் (aisleல்), தற்காலிகமா போடப்பட்ட மடக்கு (folding) ஸ்டீல் இருக்கை - குஷனும் கிடையாது கைபிடியும்
கிடையாது. இதே போல் அடுத்த வரிசையில்
இருந்த மடக்கு ஸ்டீல் இருக்கையை காண்பித்து, சுரேஷை
பார்த்து, "சார் நீங்க இங்க உட்காருங்க"
என்றார் தியேட்டர் ஊழியர்.
கோபத்தின் உச்சத்தில், சுரேஷ், "இந்தாப்பா, இந்த டிக்கெட் வி ஐ பி சீட்டிற்கு, தியேட்டர் மேனேஜர் கொடுத்தது. வா
தியேட்டர் மேனேஜரை பார்ப்போம் வா," என்றான்.
நான் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தேன்.
"சார், தியேட்டர் மேனேஜர் ஈவினிங் ஷோ போது
வரமாட்டார். நாளைக்கு தான் நீங்க பார்க்க
முடியும்", என உறுதியாக சொன்னார் - அவர் தொனியில் அதட்டலும் கொஞ்சம்
தெரிந்தது.
படம் போடும் நேரமும் நெருங்க, வேறு வழி இல்லாமல், பல்லை கடித்துக் கொண்டு படம்
பார்த்துவிட்டு திருப்பினோம்.
வீடு திரும்பும் வழியில் பல எண்ணங்கள் என் மனதில்:
‘சே ..எவ்வளவு பெரிய பல்பு இது!’
‘இதை இப்படியே விட கூடாது’
‘அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து தியேட்டருக்கு
சரியான அபராதம், தண்டனை, வாங்கித்
தரவேண்டும்’
‘நுகர்வோர் அமைப்பு எங்கேன்னு பார்க்கணும்’.
நெஞ்சில் புரட்சி தணல் தக தக என தகிக்க ஆரம்பித்தது.
‘ஏன் பார்க்கணும்? ... ஏன் மற்றவரை எதிர் நோக்க வேண்டும்?’
‘நாமே ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும். அமெரிக்காவின் ரால்ப் நாடர் போல போராட
வேண்டும்’.
புரட்சி தணல், தீயாக மாறி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
‘நுகர்வோர், மக்கள்
பிரச்சினைகளுக்காக போராடவேண்டும், தீர்வு காண வேண்டும்’.
‘மக்கள் நெஞ்சில் என் மதிப்பு ஏறவேண்டும்’.
மன ஓட்டம் தொடர்ந்தது…
‘இந்தியா டுடே இந்த ஆண்டின் மிகச்சிறந்த
மனிதர் சதானந்தன் என்று ..’ என்ற எண்ண ஓட்டத்தின் வேகத்துடனே
எங்கள் தெருவுக்குள் திரும்பினேன்.
வீட்டு வாசலில் அப்பா, கோபத்துடன்!
"ஏன்டா சினிமாவுக்கு போயிட்டு வர்ரயா. ஒரே சிகரெட் நாத்தம். இது வேறு உண்டா ?"
என ஏக வசைகளை
ஆரம்பித்தார், தொடர்ந்தார்,
"அடுத்த வாரம் எக்ஸாம் வச்சுட்டு, படிக்காமே, சினிமா கேட்குதோ?"
என ஆத்து ஆத்து என்று ஆத்தியதில் என்னுள்
எரிந்து கொண்டிருந்த புரட்சி தீ அணைந்தது.
அந்தோ, எல்லோரும்
போல் நானும் சாதாரணனானேன்.
சதானந்தன், சாதா
ஆனந்தனானேன்.
நிற்க.
ஆனா, இதை விட ஒரு
பலமான பல்பு மிக விரைவில், அனிதா என்ற ரூபத்தில், எனக்காக காத்துக் கொண்டிருப்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. இதை இன்னும் மனத்துடிப்பில் இருந்த அருணிடம் சொன்னேன்.
“யார் அந்த அனிதா?”, என்ற
அருணின் வினா உங்கள் மனதிலும் எழுகிறதா?
காண்போம் வாங்க.
கோவை பூ மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் 10பி பஸ்க்கு காத்து கொண்டிருந்தோம் சுரேஷும்
நானும்.
10பி பற்றி சொல்ல வேண்டும். அது இளைஞர்களின்
உல்லாச ஊர்தி. நெரிசலான போக்குவரத்திலும்,
அனாசியமாக வளைத்து நெளித்து அதி வேகமாக பறக்கும். 35 நிமிடத்தில் பூ மார்க்கெட்டில் இருந்து பீளமேட்டில் உள்ள எங்கள் PSG
கலை அறிவியல் கல்லூரிக்கு போய் சேர்த்துவிடும். இளசுகளின் முதல்
தேர்வு 10பி; வேகத்துக்கு பயந்தவர்கள் 10பி யை தவிர்ப்பர்.
அதனாலேயே 10பி யில் அரங்கேறிய காதல் கதைகள்
ஏராளம்.
பூ மார்க்கெட் பின் ரயில் நிலையம், அதை தாண்டிய பின் அவிநாசி சாலைதான். அவிநாசி சாலை ஒரு நேர் பாதை. வழி நெடுக
பிரசித்தி பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் - மகளிருக்கானது உட்பட. இதில் PSG பொறியியல் கல்லூரி, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, மருத்துவ கல்லூரி, CIT, GPT, அப்புறம் எங்கள் PSG கலை அறிவியல் கல்லூரி அடங்கும்.
அவிநாசி சாலையில் - கல்லூரி
நேரங்களில் பஸ் பயணம், அதுவும் 10பி யில் - சான்சே இல்லே -
காதலுக்கு அது ஒரு ராஜ பாட்டை தான்!
அதோ 10பி வந்துவிட்டது. 10பி சில நொடிகள் மட்டுமே நிற்கும்.
பஸ் ஸ்டாப்பில் சுற்றும் பார்த்தேன்.
"என்னடா அனிதாவை தேடறியா?" என கேட்டான் சுரேஷ்
இந்த வருடம் தான் அனிதா
கிருஷ்ணம்மாளில் முதல் வருடம் பி எஸ்சி சேர்த்தாள். தினமும் சேர்ந்து 10பில் தான் பயணம். முதல் நாள்
பஸ்சில் பார்த்ததில் இருந்தே எனக்கு ஒரு ஈர்ப்பு .
ரெண்டு பேர் வீடும் காமராஜ் நகரில்
தான் . எனக்கு ஐந்தாவது கிராஸ்ல்; அனிதா வீடு ஏழாவது கிராஸ்ல்.
பஸ்சில் எங்களுக்கு முன்னால் சற்றே தள்ளி விமல் ஷா
நின்றுகொண்டிருந்தான். சேட்டு பையன். குஜராத்தி. பூ மார்க்கெட் முன் நிறுத்ததில்
ஏறுவான். செல்வ செழிப்பான RS புரம் திருவேங்கடசாமி தெருவில் வீடு. விமல் முகத்தில் சேட்டு பசங்களுக்கே உரித்தான பளபளப்பு
இருக்கும் - புதுசா பெசஞ்ச கோதுமை மாவு
போல. அவன் அப்பா ராயல் என்பீல்ட் பைக் வாங்கி கொடுத்திருக்கிறார். முதலில்
பைக்கில் தான் காலேஜ்க்கு வந்தான். கொஞ்சம் ராஷ் டிரைவிங் – ஒரு சின்ன விபத்துக்கு
அப்புறமா காலேஜ்க்கு பைக் எடுக்கவேண்டாம் என அவன் சொன்னதால் பஸ்சில் வருகிறான். போன
பர்த்டே அன்று 10பி இல் எல்லா - தெரிந்த தெரியாத - மாணவர்களுக்கும்
(மாணவிகள் உட்பட) 5 ஸ்டார் சாக்லேட் கொடுத்தான்.
பஸ்க்கு வருவோம்.
பஸ் டவுன்ஹால், ரயில்
நிலையம் தாண்டி அவிநாசி சாலையில் சீறி பாய்ந்து ஓடியது.
பின்னர் வரும் லட்சுமி மில்ஸ், நவ இந்தியா நிறுத்தங்களில் கிருஷ்ண அம்மாள் மகளிர் பள்ளி
உதா நிற சீருடை உடன் மாணவிகள் ஏறினர். அதற்கு அடித்த நிறுத்தங்களில் எல்லாம்
பெரும்பாலும் பிரயாணிகள் இறங்குதல் தான் .
கிருஷ்ண அம்மாள் நிறுத்தத்தில் ஏறக்குறைய எல்லா பூவையரும்
இறங்க வெறும் நாறானது 10 பி - வெறிச்சோடிய
பஸ் இளைஞர்களின் பெரு மூச்சோடு நகர்ந்தது.
மிக
முக்கியமான நாளான அன்று - அதோ 10பி பூ மார்க்கெட் நிறுத்தத்தை நெருங்கிவிட்டது
தெரு திருப்பத்தில் அனிதா எட்டி நடை போட்டு வேகமாக வந்து கொண்டிருந்தாள்
எனக்கு பரபரத்தது. வேக ஊர்தியான 10 பி சில நொடிகளே நிற்கும்.
பஸ்சில் ஏறிய வண்ணம், நடத்துனரிடம், "அண்ணே, விசில் ஊத்திடாதீங்க அண்ணே ..2 செகண்ட்ஸ்" என நான் கெஞ்சும் பொது, ஓடி வந்த அனிதாவும் பஸ்யை அடைந்து ஏறி விட்டாள்.
சுரேஷ் என் காதில் கிசுகிசுத்தான், "சதா கவனிச்சயா? பஸ்ஸில்
சுதாரித்து ஏறிய பின் அனிதா உனக்கு தாங்க்ஸ் சொன்னாடா!".
என் காதில் அந்த
தேங்க்ஸ் ஏனோ விழவில்லை.
அன்று
விமல் பஸ்சில் இல்லை. பைக்கில் இருந்து
வழுக்கி விழுந்து (skidஆயி) இடது பாதத்தில் லேசாக எலும்பு முறிவு . கங்கா
ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தார்கள்.
"என்னப்பா கிராஸ் கட் ஸ்டாப்பிலே ஏற அந்த சேட்டு
தம்பிக்கு என்ன ஆச்சு?", விமலை பற்றி நாங்கள் பேசுவதை
கேட்ட நடத்துனர் கரிசனத்துடன் கேட்டார்.
"அண்ணா, பிராக்ஸ்ர் ஆயிடுச்சு. சரியாக ரெண்டு மூணு வாரம் ஆகும் போல" என்றேன் நான்.
அனிதாவின் தேங்க்ஸ்யை சுரேஷ் இந்த காதில் ஓதியதிலிருந்து, மனதில் படபடப்பு. அவ்வப்போது மகளிர் பக்கம் கண்கள் ஓடியது.
அனிதாவும் என்னை பார்த்து போல தோன்றியது.
"கண்டிப்பாக உன்னை பார்க்கிறாடா" என மீண்டும்
மெல்ல காதில் சொன்னான் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுரேஷ்.
அனிதாவிடம் பேச சொல்லி சுரேஷ் பல வாரங்களாகவே அனத்திக் கொண்டிருந்தான்
"சதா, இன்னைக்கு அவ உனக்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கா நல்ல டைமிங்.
பேசிடு" என்றான்.
மேலும் தொடர்ந்தான், "பஸ்லே
கஷ்டம். பூமார்க்கெட்லே ரெண்டு பேரும் ஒண்ணாதான் எறங்கறீங்க. கறி கடே ஏறக்கத்து
ரோட்லே 10 நிமிஷம் நடந்து தான் உங்க காமராஜ் நகர் ரீச் ஆகணும். அந்த
ரோட்லே நடந்து போறப்போ பேசிடு". என
ஸ்கெச் போட்டு கொடுத்தான் சுரேஷ்.
"நான் உங்க ஸ்டாப்பிலேயே எறங்கி
உன் கூட துணைக்கு வரவா" எனக் கேட்டான்.
"வேண்டாம்டா, நான் இன்னைக்கு பேசறேன்" என்றேன். சுரேஷுக்குத் தான் இதில் எவ்வளவு ஈடுபாடு என நினைத்துக்
கொண்டேன்
அனிதாவும் நானும் பஸ் சிலிருந்து இறங்கி நடக்க
ஆரம்பித்தோம்.
எப்போவும் விடு விடு வென்று வேகமாக முன்னே போகும் அனிதா
இன்று கொஞ்சம் மெதுவாக நடப்பது போல தெரிந்தது. பிரமையையோ?
கறி கடை தெருவில் பாதி தூரம் வந்துவிட்டோம் .
ஒன்றாக நடக்க வேண்டி கொஞ்சம் எட்டி நடந்தேன்.
வாய் வறண்டு போக ஆரம்பித்தது.
ஆனால் அனிதாவோ, சுற்றும்
முற்றும் பார்த்த படி, துணிச்சலுடன் பேச்சு கொடுத்தாள்.
"விமலுக்கு இப்போ எப்பிடி இருக்கு", என் கேட்டாள்.
‘ஏன் விமலை பற்றி கேட்கிறாள்?’
பேச்சை ஆரம்பிக்க இது ஒரு வழியோ என தோன்றியது.
வறண்டு வாயோடு, "சண்டே போய்
பார்த்தோம். பாதத்திலே அடி. கால் விரலே மைனர் பிராக்ட்ச்சர். மூணு வாரம்
காலேஜ்க்கு வர முடியாதுன்னு சொன்னங்க. இன்னிக்கும் அவனை பார்க்க போறோம்." மட மட வென கொட்டினேன்.
அவளோ புத்தகங்களுக்கு இடையே இருந்து ஒரு உறையை எடுத்து என்னிடம்
கொடுத்தபடியே,
"இதே விமலிடம் கொடுத்திடு. ரெண்டு மூணு நாளா விமல் கிட்டே
போனிலே பேச முடியலே. இப்போ விமல் போன் அவன் அப்பா கிட்டே இருக்கு போல”. என்றாள் . ‘ஓ விமலுடன் அவ்வளவு பரிச்சையமா?’
என் வீடு இருக்கும் ஐந்தாவது கிராஸ் வந்துவிட்டது. நான் திரும்பும் முன், "மறக்கமே கொடுத்திடு. ரொம்ப தேங்க்ஸ். எங்க ரிலேஷன்ஷிப் விஷயம்
யாருக்கும் தெரியவேண்டாம்!" என சொல்லிவிட்டு அவள் வீடு இருக்கும் ஏழாவது கிராஸ் நோக்கி
விரைந்தாள். ‘ஓ ரிலேஷன்ஷிப்!’
இது எவ்வளவு பெரிய பல்புன்னு தெரியவே பல நொடிகள் ஆச்சு.
சதானந்தன் சர சரசரவென சந்தானம் ஆனேன்!
"நெறய அடி வாங்கியிருக்கே .." என சொன்ன அருணின் முகத்தில் பல நாள் கழித்து முதன் முறையா லேசான புன்முறுவல் காண முடிந்தது.
அட, என் பியூஸ் போன பல்பு அளித்த பிரகாசமோ!
- ராகி
©

RaKi seems to have "bought many bulbs" in life! 😀
ReplyDeleteHilarious compilation of few of those bulbs.
High time the word "bulb vangarathu" got into Tamil lexicon! Can recommend to have "bought bulb" brought into English also, as no soul on earth would have escaped "buying bulbs"!!
Nice effort RaKi. Loved reading!!
A nice stinimitable style of RaKi. The story evolves out of satisfying a human psychologicalorinimitable style of RaKi. The story evolves out of satisfying a human psychologicaly in the inimitable style of RaKi. The story evolves out of satisfying a human psychological trait: If the other fellow has suffered more than me, somehow my pain
ReplyDeleteappears a bit tolerable (like Iru Kodugal movie). The suspense is maintained in all the episodes even though we tend to guess the outcome based on the plot. The way the Oru Thalai Ragam episode pans out, it really holds the reader's interest till the end. Very nice effort RaKi. Best wishes.
Pl see this corrected one: A story in the nice inimitable style of RaKi. The story evolves out of satisfying a human psychological trait: If the other fellow has suffered more than me, somehow my pain
ReplyDeleteappears a bit tolerable (like Iru Kodugal movie). The suspense is maintained in all the episodes even though we tend to guess the outcome based on the plot. The way the Oru Thalai Ragam episode pans out, it really holds the reader's interest till the end. Very nice effort RaKi. Best wishes.
You have taken me black to1975 by your lively story
ReplyDeleteTest message.
ReplyDeleteAs usual, well written Radha.
ReplyDeleteBulb well articulated.
RAMESHKUMAR
ReplyDeleteRead yr post today .what u served was not your (my) cup of tea. ..RaKi I was expecting the tea with more different flavour and aroma...I was little bit disappointed this time .but needless to say that u and yr pals have took us through our memory lane for some time...I request Suresh not to arrange for anymore bulbs in future ..