நீங்க என்னத்த கிழிச்சீங்க?
நீங்க என்னத்த கிழிச்சீங்கன்னு மாரிமுத்துவுக்குத் தெரியும்
'இந்த வருடம் யார் யார் தலைகள் உருளப் போகுதோ!'
என்ற எண்ணம் என் மனதில் சலனித்தது.
ராமநாதனாகிய எனக்கு துபாயில் உள்ள பன்னாட்டு
நிறுவனத்தில் வேலை. என்ன வேலை என தெரிந்து கொள்வதற்கு முன் என் உயர் அதிகாரி யார்
என தெரிந்து கொள்வது உசிதம்.
இந்த நிறுவனத்தின் எல்லாம் வல்ல, வெள்ளைக்கார
தலைமை நிதி அதிகாரி (CFO), டேவிட் ஹல் தான் என்
உயர் அதிகாரி. ஸ்ட்ராட்டஜிக்
திட்டத்துக்கு இந்த நிறுவனத்தில் தனியாக துறையோ ஆளோ இல்லை. டேவிட் தான் இந்த
பொறுப்பையும் கவனிக்கிறார்.
டேவிட்டின் எல்லா மேலாண்மை பொறுப்புகளுக்கும்,
எம்பிஏ படித்த நான் தான்
உதவியாளர். குறிப்பாக நிதி துறை
அறிக்கைகள் மற்றும் ஸ்ட்ராட்டஜிக் திட்டங்கள், டேவிட்டின்
வழிகாட்டுதலுடன், தயாரிப்பது
என் பொறுப்புகளில் அடங்கும்.
சுருக்கமாக, நான் டேவிட்
ஹல்லின் நிர்வாக உதவியாளர் (Executive Assistant) - தற்போது
வரை.
அன்று
நான் அலுவலகத்தில் தனியாக இருந்தேன். நேரம் மாலை 7:30
மணியை கடந்துவிட்டது. அலுவலகம் நேரம் மாலை
5:00 மணிக்கே முடிந்திருந்தது, மற்ற
எல்லோரும் கிளம்பி போய்விட்டார்கள் - அலுவலகத்தை சுத்தம் செய்யும் ஒரு சில கடை
நிலை ஊழியர்களைத் தவிர.
அடுத்த வாரம் நிறுவனத்தின் முக்கிய மேலாண்மை குழு
கூட்டம்.
வழக்கமான மாத
கடைசி அறிக்கைகளும், அத்துடன் மேலாண்மை குழு கூட்டத்துக்காக டேவிட் கேட்ட பல அறிக்கைகளும் தயார் செய்துவிட்டு,
வேண்டாத பேப்பர்களை கிழித்து குப்பை கூடையில் போட்டுக் கொண்டிருந்தேன்.
"என்ன சார், மாச கடைசி
கிளீனிங்க?"
நிமிர்த்து பார்த்தேன்.
அது மாரிமுத்து - ஆபீஸ் பாய் எனப்படும் கடைநிலை ஊழியரான
மாரிமுத்து 'வாய்-நீள' மாரிமுத்து.
அலுவலகத்தில் உள்ள ஒரே தமிழ் ஆள் என என்னிடன்
சற்றே உரிமை எடுத்து பேசுவதை நான்
உணர்ந்து இருந்தேன் - ஆனாலும் பொறுத்துக் கொண்டேன் -
சில காரணங்களுக்காக.
முதல் காரணம் - நீங்கள்
நினைத்தாற்போல, 'நம்ம ஆளாச்சே' என்ற காரணம்.
இன்னொன்று - நிதி துறை ஊழியர்களை பற்றி மாரிமுத்து அள்ளி தெளிக்கும்
தகவல்கள்.
ஒன்பதாவது மாடியில் நிறுவன தலைமை அதிகாரியின் (CEO)
அறைக்கு அடுத்தது டேவிட் ஹல்லின் அறை - அதை ஒட்டி டேவிட்டின் பர்சனல்
செகரேட்டரி மற்றும் என் அறை.
நிதி துறையை சார்ந்த ஏழு பேர், நிதி கட்டுப்பாட்டாளர்
எகிப்த்தை சேர்ந்த ஹைதம் தலைமையில், எட்டாவது
மாடியில்.
நிதி துறைக்கும் மாரிமுத்து தான் ஆபீஸ் பாய்.
ஆக, எட்டாவது மாடியில் நடப்பது மாரிமுத்து நீள வாய் மூலமாக
எனக்குத் தெரியவரும்.
மாரிமுத்துவின் "என்ன
சார், மாச கடைசி கிளீனிங்க?" என்ற கேள்விக்கு பேப்பர்களை கிழித்தபடியே, "ஆம்." என சுருக்கமாக பதில்
தந்தேன்.
"ஏன் சார், அப்போப்போ
கிளீன் செஞ்ச ஈஸியா இருக்காது?" என்று வாயை வழக்கம் போல நீட்டினான் மாரிமுத்து.
அவன் சொல்வது சரிதான் - மாச கடைசி வரை குப்பையை சேர்த்து
வைத்து பின் ஒன்றாக கொட்டுவது உசிதமானது அல்லதான்.
பதில் ஏதும் அளிக்காமல், பேப்பர்களை
கிழித்து போடுவதில் கவனம் காட்டினேன். துண்டாக்கப்பட
வேண்டிய ரகசிய பேப்பர்களை துண்டாக்கியில் (shredderல்). கூடுதலாக அடுத்த வாரம் நடக்கப்போகும் மேலாண்மை குழு
கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் பற்றி என் மனம் அலைபாய்ந்தது.
தான் பேசியது எனக்கு எரிச்சல் தந்திருக்கும் என்று
உணர்ந்த மாரிமுத்து நிதி துறையில் உள்ள
மற்றவர்களை பற்றி பேச ஆரம்பித்தான்.
"சார், கீழே
எட்டாவது மாடிலே ஹைதம் சார் இப்படித்தான் உங்களை போல மாச கடைசிலே நிறைய கிளீன்
செய்வார். ஆனா, எப்பவும் தலே நிமிராமே வேலை செய்வார். யார் கூடவும்
அதிகம் பேச மாட்டார். வேலே வேலே தான் அவருக்கு".
ஹைதம் சிறந்த ஊழியர் என்பது எனக்குத் தெரிந்ததே. அவருடன்
என்னை ஒப்பீடு செய்து நிலைமையாய் மாரிமுத்து சமாளித்த விதத்தை கவனிக்கவும்
செய்தேன்.
"அப்படியா?" என கேட்பது
போல பாவித்தேன்.
"ஆனா சார், அந்த அமிர்
இல்லே, அந்த லெபனி ஆள் சார். அடிக்கடி சீட்லே இருக்கமாட்டார்.
வெளியே போயிடுவார். பேங்க்லே கடன் வாங்கி கன்னாபின்னானு
செலவு செய்வார் போலே. ஷோக்கு ஆளு சார். காஸ்டலி கார் எல்லாம் வாங்கறார். லோன் சரியா
கட்டலே. பேங்க் ஆளுக ஆஃபீஸிக்கே வந்து
வெரட்டிக்கிட்டு இருக்காங்க. இந்த ஆள்
ஆஃபீசிலே எப்பிடி வேலே ஒழுங்கா
செய்வாரோ". என சொல்லி
முடித்தான் மாரிமுத்து.
அமிர் நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் நல்ல பொறுப்பா வேலை
செய்த ஆள்தான். சமீப காலமாக மாறிவிட்டானோ என தோன்றியது எனக்கு.
“அட.." என்றேன் சுவாரசியம் இல்லாதது போல.
மாரிமுத்து நிறுத்துவது போல தெரியவில்லை.
"அவருக்கு பக்கத்திலே இருக்கிற நாலு பேரு,
பாகிஸ்தானி ராஷித், ஸ்ரீலங்கா சனக, குஜராத்தி வியாஸ், பெங்காலி
பானெர்ஜி எல்லாம் நல்லா தெம்பா வேலை செய்றங்க. லஞ்ச் அப்புறம் டி,
காபி பிரேக் எடுக்கற தோடு சரி. மத்த நேரம்
வேலையில் மும்முரமாக இருக்காங்க", என்று அந்த
நாலு பேருக்கு நற்சான்றிதழ் அளித்தான் மாரிமுத்து.
ஒரு ஆள் குறையுதே என யோசிக்கும் போது மாரிமுத்து
தொடர்தான்.
"அந்த கோவாகாரி ஸ்டெல்லா எப்போ பாரு மொபைல்
போனிலேதான். புருஷன்,
கொழந்தைக, பிரெண்ட்ஸ் போன். இல்லே வாட்ஸாப்ப் மெசேஜ். இல்லே
சாக்கெலட்டை சாப்பிடுவாங்க. சரியான வேஸ்ட்சார் இந்த அம்மா".
நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் 'அப்படியா'
என்பது போல மாரிமுத்துவை பார்த்தேன்.
நான் அவன் சொல்வதை நம்பவில்லை என்று எண்ணிய மாரிமுத்து,
"சார், உங்களுக்கு புரூப் வேணுமா சார்? டூட்டி
முடிஞ்சு எல்லோரும் போன பின் அவங்க குப்பை
கூடையை பாருங்க சார். அங்கே தெரியும் அவங்க அவங்க
கேரக்டர் சார் !"
சற்றே துணுக்குற்று, சுவாரசியத்துடன்,
மாரிமுத்துவை நிமிர்ந்து பார்த்தேன்.
தன் கணிப்பை சரிபார்க்க (validate செய்ய)
மற்றுமொரு அளவீடா? 'சபாஷ்'
என மெச்சத் தோன்றியது.
"சார், வேலை
முடிஞ்சு பின் உங்க குப்பை கூடை,
அப்புறம் ஹைதம் சார் கூடையை பாருங்க சார். வேண்டாத பேப்பர்களை நேர்த்தியா கிழிச்சு
போட்டுட்டிருப்பீங்க. மாச கடைசில நெறய போடறீங்க
- நெறய போடறது பிரச்சனை இல்லை
- ஓழுங்க போடணும். நீங்க
குப்பையை நீட்டா போடறீங்க”.
“குப்பை அள்ளுற எங்களுக்கு பாலிஸ்டிக் பையை கூடையிலிருந்து
உறுவாமே, பெரிய பைலே கொட்டினா போதும். குப்பை கூடைக்கு
வாரத்துக்கு ஒரு புது பிளாஸ்டிக் பை மாத்தினா போதும் ".
ஒவ்வொரு குப்பை கூடையிலும் ஒரு பிளாஸ்டிக் பை சொருகி
இருப்பது நினைவில் வந்து போனது எனக்கு.
மாரிமுத்து, தொடர்தான்.
"ஆனா சில பேர் அப்படி இல்லே சார்.
இந்த அமீர் போல. பேப்பரை கசக்கி போடுவது; கசக்கி போட்டா
கூடை சீக்கரமே ரொம்பிடும். பின்னே சுயிங்கம் மென்னு மிச்சத்தை குப்பையிலே
போடறது”.
“எதையாவது தின்னுட்டு மிச்சம் மீதியை பாண்டரி (pantry)
குப்பை கூடையேலே தான் போடணும். அப்படி போடாமே அவங்க அவங்க டேபிளுக்கு கீழே இருக்கற
குப்பை கூடையேலே போடறது".
"இவங்க குப்பையை அள்ளுறது சிரமம் சார். பிளாஸ்டிக் பையை
தினமும் மாத்தணும். இல்லே ஆபீஸ் நாத்தம் அடிக்கும்".
"நம்ம டிபார்ட்மெண்ட் மட்டுமில்லே சார்.
எல்லா டிபார்ட்மெண்ட்லேயும் இப்படி சில ஆட்கள் இருக்காங்க" என பொழிந்தது
தள்ளினான், பட்டறிவாளி, மாரிமுத்து.
விளக்கக்காட்சி (Powerpoint presentation)
அற்ற கருத்தரங்கு போல கொஞ்சம் உணர்தேன்.
அன்றைய கடைசி பேப்பரை எச்சரிக்கையுடன், நேர்த்தியாக,
மாரிமுத்துவின் (மேற்) பார்வையில் கிழித்து குப்பை கூடையில் போட்டவாறே யோசித்தேன்.
‘டிஜிட்டல் கால்தடம் போல, மனித
உளவியலை கூர்ந்து ஆராய இந்த குப்பையிடும் தன்மையின் கால்தடமும் பயன்படுமோ’
எனத் தோன்றியது.
"சார் இது போல நெறய இருக்கு சார். இதுக்கே
என்னை வாய் நீளமுன்னு சொல்ரீங்க" என்று மீண்டும் நீட்டிவிட்டு நகர்ந்தான்
மாரிமுத்து.
மேலாண்மை
குழு கூட்டத்திக்காக டேவிட் கேட்ட எல்லா
அறிக்கைகளும் முடித்துவிட்டேனோ என்று மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விட்டு,
அலுவலகத்தை விட்டு கிளம்பினேன்.
இந்த அறிக்கைகளில், சில
மாதங்களாகவே, வரவு
செலவு கணக்குகளின் போக்கு சொல்லும் படியாக இல்லை. விற்பனை மற்றும் வரவுகள்
இனிமேலும் கூடவில்லை என்றால் செலவுகள் மீது நிர்வாகம் கை வைக்க வேண்டி வரும்,
ஊழியர்களின் வேலை உட்பட.
பன்னாட்டு அலுவலங்களில், அதுவும்
துபாய் போன்ற இடங்களில், இது சகஜம். இருந்தாலும் எனக்கு கொஞ்சம் நெருடலாகத்தான்
இருந்தது. அடுத்த வாரம் நடக்கவிருக்கும்
மேலாண்மை குழு கூட்டத்தில் இந்த அறிக்கைகள் அலசி ஆராயப்படும் - பின்னர் தெரியும்
எத்தனை தலைகள், யார் தலைகள் உருளப்போகின்றன என்று.
இந்த விஷயத்தில் இருபத்து ஐந்து
வருட அனுபவசாலியான டேவிட் எடுக்கும் முடிவுகள் புள்ளி விவரங்களை மிகவும்
சார்ந்து இருக்கும்.
புள்ளி விவர புலி அவர். புள்ளி விவரங்கள்,
டாட்டா (data) இல்லாமல் பேச மாட்டார். அப்படி யார் பேசினாலும் அவரிடம் எடுபடாது - அவர்
மட்டுமல்ல மேலாண்மை குழுவில் உள்ள பெரும்பாலோரும்
அப்படித்தான்.
அதற்காக, வாரக்கணக்கில் பல ரகமாக அறிக்கைகளை தயாரிக்க
வைப்பார். அவைகளை அலசி ஆராய்ந்து நிறுவனம்
லாபகரமாக செயல் பட, லாபத்தைக் கூட்ட என்ன செய்யவேண்டும்;
செலவுகளை கட்டுப்படுத்துவது எப்படி? எத்தனை பேரை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று
எடுத்துரைப்பார் - எல்லாம் புள்ளி விவர அடிப்படையில்.
ஆனால், ஆட்களை காவு வாங்கும் அலசல்களில், ஆட்டத்தில், என்னை
சேர்த்துக் கொள்ளமாட்டார் - தானே செய்வார் - ரகசியம் காக்க.
இன்று
மேலாண்மை குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா துறை தலைவர்கள் இதில் அங்கம்
- நிதி கட்டுப்பாட்டாளர் ஹைதம் உட்பட.
காலை 10 மணிக்கு ஆரம்பமானது இந்த கூட்டம். டேவிடிக்கு வேண்டிய அறிக்கைகள்
மற்றும் தகவல்களை காலை 9:30 மணிக்கே கொடுத்து விட்டேன்.
கூட்டம் முடிய எப்படியும் இரண்டு அல்லது இரண்டரை மணி
நேரம் ஆகும்.
ஆகியும் விட்டது.
இதோ டேவிடும் ஹைதமும் கூட்டம் முடிந்து வந்து
கொண்டிருக்கிறார்கள்.
ஹைதமை அழைத்துக்கொண்டு தன் அறைக்குள் நுழையும் முன்,
“ராம்நாட், கம் இன்”, என்று என்னை
உள்ளே அழைத்தார் டேவிட்.
என் கையில் ஒரு மடித்த பேப்பரை திணித்தபடி,
"ஹெச் ஆர் தலைவர் ரினாவிடம் இந்த லிஸ்டில் உள்ளவர்களுக்கு
டெர்மினேஷன் லெட்டர்கள் ரெடி பண்ணச்சொல்" என்றார் ஆங்கிலத்தில்.
மடித்த பேப்பரில் யார் பெயர்கள், குறிப்பாக
நிதி துறையில், இருக்கு
என தெரிந்து கொள்ள படபடப்புடன் கூடிய ஆவல்
ஏற்பட்டது. டேவிட்
பேசிக்கொண்டிருக்கும் போது மடித்த பேப்பரை திறந்து பார்ப்பது நன்றாக இருக்காது
- பேப்பரை என்னிடம் கொடுத்ததால் என்
பெயர் பட்டியலில் இல்லை என்பது உறுதியானது,
நிம்மதியை அளித்தது.
ஹைதமை பார்த்து,
டேவிட் , "நிதி துறை ஹெட் கௌண்டில் ஒரு ஆள் கம்மி பண்ணவும்.
இன்னொரு காலி இடத்துக்கு திறமையான ஆளை,
இன்டெர்னல் வாக்கன்ஸி மூலம், தேர்வு
செய்வும்", என ஆங்கிலத்தில் ஆணை
இட்டார்.
'அப்போ நிதி துறையில் ரெண்டு பேருக்கு வேலை போச்சு'
என மனதில் நினைத்துக்கொண்டேன்.
என்னைப் பார்த்து நீ போகலாம் என சமிக்சை செய்தார்.
உடனே என் இருக்கைக்கு வந்து அமர்ந்து மடித்த பேப்பரை அவசரமாக திறந்து பார்த்தேன்.
அதில் இருந்த நிதி துறை சார்ந்த அந்த இரண்டு பெயர்களை பார்க்க கண்கள் அலை பாய்ந்தன.
அந்த பெயர்களை பார்த்ததும் என் கண்கள் விரிந்தன.
காரணம்: வாரக்கணக்கில், மேலாண்மை முறைகளை பயன்படுத்தி ஆழ்ந்து
ஆராய்ந்து நிர்வாகம் எடுத்த முடிவு, மாரிமுத்துவின் கணிப்புடன் ஒத்துப் போனது.
அந்த பெயர்கள்: அமிர், ஸ்டெல்லா.
மாரிமுத்துவின் வாய் நீட்டத்தில், பட்டறிவின் ஆழத்தை
அறிந்தேன்.
-
ராகி
©
nicely articulated
ReplyDeletethe flow is super
Thank you Samrat!
DeleteExcellent analysis
ReplyDeleteThank you Deiva!
DeleteA realistic story in a captivating style. In organisations some of those who are lower in the hierrarchy can predict the future happenings in the top level by 1) virtue of experience combined with a brilliant common sense 2) having access to confidential papers before becoming public 3) being a better judge of people & performance etc. All these & more have been finely woven into a highly readable story. A great effort RaKi, once again.
ReplyDeleteWaste bin Appraisal seems to be the new trend in Dubai!! 😀
ReplyDeleteWe hardly realise that there are many who would be looking at you and your behaviour and judge you very well in the working environment. You are being watched, your character shows even in the waste bin!!
A nicely crafted story that grabs your attention span. Well spun, Raki!
Like the flow and your keenness to bring out the contents almost in Tamil words without mixing English in-between. The plot also has a lot to say and ponder! Raki you rock!!
ReplyDeleteSuper ..well articulated Uncle!
ReplyDelete