வெள்ளைக்காரனுக்கே வெள்ளை அடிப்போம்
வெள்ளைக்காரனுக்கே வெள்ளை
அடிப்போம்
“சண்டையினா
சட்டை கிழியத்தானே செய்யும்” என்பது போல, நாம் ஸ்மார்ட் போனில் தட்டச்சு (typing) செய்யும்
போது, எழுத்துப்பிழை, ஏற்பட வாய்ப்புகள் நிறைய உண்டு. அப்படி ஏதாவது பிழை ஏற்பட்டால்,
ஸ்மார்ட் போன் தானாகவே (சமயங்களில் முந்திரி
கொட்டையை போல) சில சொற்களை பரிந்துரை செய்வதை
கவனித்திருப்பீர்கள் - அவற்றில் நமக்கு வேண்டிய பரிந்துரையை தேர்ந்து
எடுப்போம். இதை ஆங்கிலத்தில் autocorrection என சொல்வார்கள். இந்த வசதி நாம் தட்டச்சு செய்யும் எல்லா மின்னணு
சாதனங்களிலும் உள்ள மென்பொருளின் அங்கம். சுருங்கச்
சொன்னால், இந்த 'தான்திருத்தி'
(autocorrectionக்கு அடியேனின் தமிழாக்கம்) எடுத்ததற்கு எல்லாம் குத்தம் சொல்லும் நம்
ஸ்கூல் கனகா டீச்சர் போன்றது!
இந்த
பரிந்துரைகளை சற்று உன்னிப்பாக பாருங்கள்;
அது ஒவ்வொரு சொல்லுக்கும்
அதற்கு நெருங்கிய சொற்களை பரிந்துரைக்கும்.
இந்த
'தான்திருத்தி’யை (autocorrection யை) ஏதோ தகவல்
தொழில்நுட்ப யுகத்தின் கண்டுபிடிப்பு என சொல்வார்கள்.
இல்லவே
இல்லை!
பன்னெடுங்காலமாகவே
இது நடந்து கொண்டிருக்கிறது.
நம்புங்க! சரித்திரத்தை சற்று திரும்பி
நோக்கினால் நம்புவீர்கள்.
நோக்குங்கள்.
1498ல் போர்ச்சுகல் மாலுமி வாஸ்கோ ட காமா, அவரின்
துருப்புகளுடன், இந்தியாவின் தென்மேற்கு கரையோர துறைமுகமான கோழிக்கோட்டில்
கரையேறினார். அவர் கண்டுபிடித்த கடல்வழி
மார்க்கமே ஐரோப்பாவின் வர்த்தகர்களுக்கும்
ஆய்வாளர்களுக்கும் ஒரு ராஜ பாட்டையானது.
இப்படி
மலையாள பிரதேசத்தில் வந்த இறங்கிய ஐரோப்பர்கள், அவர்கள் இதுவரை கண்டு அறியாத பலா பழத்தை
கண்டு அதிசயத்தார்கள், “இது என்னடா,
இவ்வளவு பெருசா, முற்களுடம், அறுத்தால் பிசுபிசுவென்று, பல சுளைகளுடன், விசித்ரா மணத்துடன் இப்படி ஒரு பழம்?”
இதற்கு
என்ன பெயர் என உள்ளூர் சேட்டன்களிடம் கேட்டனர். அவர்களும் "ச்சக்க" என, மலையாள பெயரை
பறைந்தனர். போர்துகீசியர்கள் ‘Jaca’ என பலா பழத்துக்கு பெயர் இட்டனர்.
பின்னர்
ஆங்கிலத்தில் இதற்கு நெருங்கிய சொல்லான ‘Jack’ என தான்திருத்தம் (autocorrect) ஆனது.
ஆகவே
மலையாள "ச்சக்க",
‘Jack fruit’ என அறியப்படுகிறது.
இப்படியே
தமிழ் / மலையாள "மாங்கா",
‘Manga’ என போர்துகீசியர்களால்
அறியப்பட்டு, பின்னர் ஆங்கிலயேர்களால் ‘Mango’ என திருத்தம் ஆனது.
இந்த
இரண்டும் முதல் படியிலே நடந்த தான்திருத்தங்கள் அல்ல;
பெயர்கள் மறுவி
பின்னர் தான்திருத்தம் ஆனவை.
இப்பொது
முதல் படியிலே நடந்த தான்திருத்தங்களை பார்ப்போமா?
திருஅனந்தபுரம்
என்ற ஊர் பெயர் வெள்ளைக்காரன் வாயில் நுழையவில்லை; "திரு", "திரு" என விழித்தார்களோ என்னவோ, அதற்கும் ஒரு தான்திருத்தம்
(autocorrection) செய்தார்கள் - அவர்கள் மொழியில் இதற்கு
நெருங்கிய மூன்று சொற்களான ‘Tri-van-drum’ என ஊர் பேரை
மாற்றினார்கள்.
“அப்படியா?.. சொல்லவே…இல்லை!” என ஆச்சரிய படுகிறீர்களா? தொடர்ந்து கேளுங்கள்.
அடுத்து
வெள்ளைக்காரர்கள் நம்ம திருச்சிராப்பள்ளிக்கு வந்தார்கள். மலைக்கோட்டையை
சுற்றிவந்தார்களா என தெரியாது, ஆனால் ஊர் பேரை
கேட்டதும் கண்டிப்பாக அவர்களுக்கு தலை சுற்றியிருக்கும். உடனே
அவர்கள் மொழியில் உள்ள நெருங்கிய சொற்களை வைத்து ‘Tri-chi-no-poly’ என அவர்கள்
வாயில் நுழையும்படி தான்திருத்தம் (autocorrect) செய்தார்கள்.
இங்கநேயே, கொல்லம், ‘Qui-lon’ ஆயி;
நம்ம
தூத்துக்குடி, ‘Tut-i-co-rin’ ஆச்சு;
விசாகப்பட்டினம், ‘Vizag’ ஆயிந்தி.
இப்படியாக, நம்ம பெயர்கள் எல்லாம்
ஆங்கிலத்தில் வெள்ளை அடிக்கப்பட்டன.
பிரிட்டிஷ்காரன்
கோலோச்சிய காலமது. அவன் சிதைத்த பெயர்கள் நம் அரசு ஆவணங்களில்
நுளைந்து, ஏறக்குறைய நிரந்தரமாகிவிட்டன.
காலம் மாறி விட்டது. இந்தியா பல துறைகளில் முன்னேறி வருகிறது.
பொருளாதாரத்தில் பிரிட்டனை பல ஆண்டுகளுக்கு முன்பே முந்தி விட்டது.
சமீப
காலங்களில் இந்தியாவில் பல அசல் பெயர்கள்
திரும்ப கொண்டு வரப்பட்டன;
மும்பை, கொல்கொத்தா, பெங்களூரு
போல. இது போதுமா?
“ஆணிகளை பிடிங்கினால் மட்டும் போதுமா? நாமும்
அடிக்கவேண்டாமா?”, என
பசங்க கோஷம் போடறது கேட்குது.
அகராதியை
புரட்டி, ஆங்கில பெயர்களுக்கு தமிழில், சுருக்கென தான்திருத்தம்
செய்து, வெள்ளை அடிப்போம், வாருங்கள்.
“Britain
யை, ‘பிரித்தான்’ என கன பொருத்தமாக திருத்தம் செய்வோமே!”,
“Nottinghamshire யை ‘நாட்டாண்மைசேரி’ கூவி அழைப்போமே”.
“Cricketயை ‘கிரிகட்டு’ என்று செல்லமாக கூப்பிட்டு
விளையாடுவோம்”.
“அவருக்கு தான்திருத்தி மூலம் ‘முத்துப்பாட்டன்’ என தமிழில் பெயர் சூட்டி அழகு பார்ப்போம்!”
மொத்தத்தில், வெள்ளைக்கரானுக்கே, தமிழில், வெள்ளை அடிப்போம்!
- ராகி
©
💌
©
💌

I'm really amazed by your wonderful thought process. Simply awesome Radha 👏
ReplyDeleteஇங்கு நமக்கே நிறைய வெள்ளை அடிக்க வேண்டியுள்ளது. ☺️ முதலில் அதை செய்ய முற்படுவோம். நம்ம ஊரையும் வெள்ளையன் விட்டுவைக்கவில்லை கொவன் புத்தூர் கோயம்புத்தூர் உதகைமண்டலம் ஊட்டி
ReplyDelete