தமிழ் பற்று காஞ்சிப் பட்டான கதை
தமிழ் பற்று காஞ்சிப் பட்டான கதை
இந்தியாவின்
சுதந்திரத்திற்கு முன்பே அன்றைய மதராஸ் மாகாணத்தில் இந்தி எதிர்ப்பு அலை உருவானது.
1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது போராட்டத்திற்கு பின் நடந்த 1967
தேர்தல் தமிழக அரசியலின் முக்கியமான திருப்பு முனை. அந்த தேர்தல் வெற்றிக்கு பின், தி மு க ஆட்சியில் அமர்ந்ததும் இந்தி மொழி பள்ளி படிப்பில் இருந்து
நீக்கப்பட்டது. அடுத்த நாள், "இந்தி ஒழிந்தது" என
பீறிட்டது தினத்தந்தி தலைப்பு செய்தி.
50 ஆண்டுகளுக்கு பின், 2016ல், நடந்த
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ் கலாச்சாரத்துக்கான மற்றுமொரு மகத்தான போராட்டம்.
தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் 'வெளியிலிருந்து' சவால்கள் ஏற்படும்போதெல்லாம் தமிழர்கள் எழுச்சியுடன்
போராடியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட
போராட்டங்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ்
கலாச்சாரத்தின் மீது தமிழர்கள் கொண்ட பற்றை பறைசாட்டின.
இதுவரை பல போராட்டங்கள் தமிழ் மற்றும்
தமிழ் கலாச்சாரத்தை காக்க நடந்தது இருக்கின்றன - அவை 'அறிவிப்பு பலகைகளில் தமிழ்', 'மத்திய அரசின் மொழி கொள்கைகளை
எதிர்ப்பது' என பல வகை படும். குறைந்த பட்சம், ஆண்டுக்கு
ஒன்று அல்லது இரண்டு போராட்டங்கள் நடந்திருக்குமோ?
ஆனால், சற்று உன்னிப்பாக
இன்றைய தமிழர்களின் வாழ்க்கை முறையை உற்று
நோக்கினால், இந்த ‘தமிழ் பற்று’ வெறும் வாயளவிலோ என எண்ண தோன்றும். தமிழர்கள் தங்கள் அன்றட வாழ்க்கை முறையில்
தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் விட்டு விலகி செல்ல ஆரம்பித்து வெகு
காலமாகிவிட்டது என்றே தோன்றுகிறது.
உண்மை. கசப்பான உண்மை.
"அம்மா, பாரு அம்மா, இன்னைக்கு விஜய் டிவி லே பிரியங்கா பட்டு சேலையிலே வந்து இருக்காங்க;
மா பா கா பட்டு வேட்டியிலே ..!", என
அதிசயித்தாள் 8 வயதான அகிலா.
உள்ளே
இருந்து அகிலாவின் அம்மா,
"ஆமா அகிலா, இன்னைக்கு பொங்கல் பண்டிகை இல்லையா
அதான்",
"நான் கூட பட்டு சேலை கட்டிக்க போறேன்; அப்பாவும்
பட்டு வேட்டி, நீயும் பட்டு பாவாடை போட்டுக்கோங்க ".
"பட்டு பாவாடை…யா ..", என கேள்வியா பதிலா என
இனம் பிரிக்கா முடியாதபடியான
விடையையளித்தாள் அகிலா.
கடந்த 50 ஆண்டுகளில், தமிழ் மொழிவழி கல்வி பயில்பவர்
சதவிகிதம் விரைவாக குறைந்து கொண்டே வருகிறது என்பது நிதர்சனம். பல ஊர்களில், ஆங்கில
மொழிவழி கல்விக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்திலேதான், தமிழ் மொழிவழி கல்வியை தேர்வு செய்கின்றனர்
பெரும்பாலோர்.
கல்வி
போல, உடை
மற்றும் பேச்சு மொழி, கலாச்சாரத்தின் முக்கிய அடையாளங்கள்.
நகர்புறத்து தமிழ் ஆண்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வேஷ்டியிலிருந்து ‘பேன்டு’க்கு பெயர்ந்துவிட்டனர். வேட்டி என்பது எப்போதோ விழா காலங்களுக்கு
மட்டும் என்றாகிவிட்டது. மற்ற எல்லோரும்
"நாங்களும் பேன்டுக்கு மாறிட்டோம்" என கூறும் நிலை வெகு தூரத்தில்
இல்லை.
மேலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக
அடித்துக்கொண்டிருக்கும் ‘சுடிதார்’ பேரலையில், தமிழ் மகளிரின் தாவணி இருந்த
இடம் தெரியாமல் "போயே போச்சு". இப்போ அது சேலைக்கும் சவால் விடும்
அளவுக்கு வந்துவிட்டது.
பல தமிழ் குடும்பங்களுக்குள், குழந்தைகள்,
"அம்மா",
"அப்பா" என்றழைக்கும் பழக்கத்தை விட்டு,
"மம்மி", "டாடி" என மாறி ,
தற்போது, "மாம்", "டாட்" என சுறுக்கி
கொண்டு இருக்கிறார்கள். மற்றவரும் அதிவிரைவாக இங்கே வந்தடைவார்கள்.
குழந்தைகள் பெயர்கள், "சந்திரன்" ,"குமரன்".
"செல்வி" , "திலகம்" என்ற தமிழ்
பெயர்கள் போய், "கிரண்", "முகேஷ்", "தீப்தி", “ரீத்து", என்ற பெயர்கள் வழக்கத்துக்கு
வந்துவிட்டன.
குழந்தைகள் பெயர்கள் தவிர, நிறுவனங்கள், பள்ளி,
கல்லூரி பெயர்களிலும் தமிழை தவிர்த்து, ஆங்கிலத்தில்
வைக்கிறோம்.
ஆனால்,
இவைகள் எல்லாம் மாறினாலும், தமிழ் உணவு,
மற்றும் சில சடங்கு,
சம்பிரதாயங்கள், திருவிழாக்கள் போன்றவை இன்னமும் தாக்கு பிடித்து
கொண்டிருக்கின்றன. பிட்ஸா, பர்கர் என்ற உணவு வகைகள்
வந்தாலும், இட்டிலி,
தோசை, சாம்பாருக்கு இன்னும் மவுசு உண்டு.
ஆனால், உடை, கல்வி, பேச்சு என்பவைகள் சிதைந்தாற்போல, இன்னும் சில கால கட்டங்களில் ஒவ்வொரு கலாச்சாரத்தின் அங்கமும் சிதைந்து போய்விடுமோ என்ற பயம்
உண்டு.
இந்த
மாற்றங்கள் சாதாரண மாற்றங்கள் அல்ல.
இவைகள் நம்மை தமிழில் இருந்தும் தமிழ் கலாச்சாரத்தில் இருந்தும்
நிரந்திரமாக விலக்கிவிடும் அபாயம் உண்டு. ஆம். இந்த மாற்றங்கள், மறுமாற்றங்கள் இல்லாதவை.
இந்த மாற்றங்கள்,
தமிழரின் சொந்த தேர்வு அல்லவா? இதற்கு எந்த
வடக்கத்தாரையோ, மற்றவரையோ குற்றம் சொல்லமுடியுமா?
ஆனால்,
இதில் வினோதமானது
என்னவென்றால், அவ்வப்போது வெளியாட்களால் ஏற்படும் சீண்டுதலால் தமிழையும் தமிழ் பற்றை
ஒட்டியும், தமிழர்களுக்குள்
எழும் எழுச்சி, எதிர்த்து நடக்கும் போராட்டங்கள்;
அதில் தவறாமல் பங்கேற்கும் தமிழர்கள்!
போராட்ட நோக்கம் வேறு, நடைமுறை வேறாக இருக்கிறதே!
அல்லது,
அவர்கள் வேறு, இவர்கள் வேறா?
பொங்கல்,
தீபாவளி, திருமண மற்றும் குடும்ப விழாக்களின்
போது, பெண்கள் காஞ்சி பட்டு புடவைகளை உலர் சலவை செய்து உடுத்துவது
போல, ஆண்கள் வேட்டியை உடுத்துவது போல, தமிழர்கள் தங்கள்
'தமிழ் பற்றை' போராட்ட நாட்களில் மட்டும் உடுத்த முடிவு செய்து விட்டார்களோ என தோன்றுகிறது.
"நம் கலாச்சாரத்தை வெளியாட்கள் யாரும் குலைக்க விடமாட்டோம்; அதை நாங்களே செய்வோம்" என்ற
நிலைக்கு நாம் வந்து விட்டோமோ?
- ராகி
©
💌
- ராகி
©
💌

Comments
Post a Comment